ஒருநாள் சர்வதேச போட்டி, மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து குமார் சங்கக்கார இன்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தான் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சங்கக்காரவின் அறிக்கை வருமாறு:
தேசிய அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நான் தீர்மானித்துள்ளேன். எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு புதிய, சிறந்த அணித் தலைவரை தெரிவுசெய்ய வேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்துள்ளேன்.
இவ்வாண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தேன். அடுத்த உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும்போது எனக்கு 37 வயதாகியிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் தலைவர் ஒருவர் அவசியமாகிறார்.
அணித் தலைவராக இருந்த காலப்பகுதியில் நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டு. எனினும் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிக்கொண்டமை வருத்தமளிக்கிறது. ஆனபோதும் நாம் சிறப்பாக விளையாடினோம் என்பதில் ஐயமில்லை.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள எமது ரசிகர்கள் எமக்கு பக்கபலமாக இருந்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை நான் என்றும் மறக்க மாட்டேன். உத்வேத்துடன் முன்னேறுவதற்கு அவர்கள் தந்த ஆதரவும் காரணமாக அமைந்திருந்தது. அதனால் ஒவ்வொரு வீரரும் நன்றிக்கடன் உடையவராக இருக்கிறோம்.
அணித் தோ்வாளர்களை நேற்று சந்தித்து எனது தீர்மானம் குறித்து ஆலோசித்தேன். புதிதாக நியமிக்கப்படும் தலைவர் சிறந்த நிலையில் முன்னேறுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் குறிப்பிட்டேன்.
ஓய்வுபெறுவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்திலும் சிறந்த முறையில் எனது திறனை வெளிக்காட்ட முயற்சி செய்யவுள்ளேன்.
இந்தத் தருணத்தில் எனது அணிவீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் அணியை சிறப்பாக வழிநடத்திச்செல்ல உறுதுணையாக இருந்த எனது மனைவி, பிள்ளைகள் குடும்பத்தாருக்கும் நன்றி பகர்கிறேன். என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைக்கு போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை எனவும் ‘இன்னும் 2-3 வருடங்களுக்கு நான் விளையாடுவேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.